கடவுச்சீட்டு சேவைகள் நாளை மீள ஆரம்பம்

08.11.2022 15:37:11

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள்  நாளை (09) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (08) முற்பகல் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயல்முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேச்சாளர், இன்று முற்பகல் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.