மெக்சிகோ கனமழையால் 44 பேர் உயிரிழப்பு!

13.10.2025 08:34:50

மெக்சிகோவில் பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனால் உண்டான அனர்த்தங்களுக்குப் பின்னர் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (13)  தெரிவித்துள்ளது.

பிரிசில்லா மற்றும் ரேமண்ட் ஆகிய வெப்பமண்டல புயல்களால் ஏற்பட்ட அடைமழையால் ஐந்து மாநிலங்களில் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெராக்ரூஸ் மாநிலத்தில் 18 பேரும், ஹிடால்கோவில் 16 பேரும், பியூப்லாவில் ஒன்பது பேரும், குவெரெட்டாரோவில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட 139 நகரங்களுக்கு உதவி புரியும் ஒரு திட்டத்தை ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கம் நிர்வகித்து வந்தது.

மெக்சிகன் இராணுவத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், உயிர்காக்கும் படகுகளைப் பயன்படுத்தி மக்களை வீரர்கள் வெளியேற்றுவதையும், சேற்றில் மூழ்கிய வீடுகளையும், நகர வீதிகள் வழியாக இடுப்பு உயர நீரில் மீட்புப் பணியாளர்கள் சிரமப்பட்டுச் செல்வதையும் காட்டுகின்றன.