மு.க. ஸ்டாலினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
|
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சில முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, அதே தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருஞான சம்பந்தம் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பது குறித்த விவரத்தையும், அந்த அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு பகுதியில் வாங்கப்பட்ட சொத்து தொடர்பான தகவல்களையும் குறிப்பிடவில்லை. |
|
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அமர்வில் இன்று (27.07.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான விவரங்களைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட்டார். இதையடுத்து,வேட்புமனுவில் எந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டு விளக்குமாறு நீதிபதிகள் மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் சில ஆவணங்கள் தமிழில் இருப்பதால், அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். |