மீண்டும் போட்டி - புதியவர் யார் ?
பிரித்தானிய பிரதமராக, கடும் போட்டிகளுக்கு மத்தியில் தேர்வான லிஸ் ட்ரஸ் நேற்று பதவி விலகினார்.
இவர் பிரதமரானதும் திடீரென வரிக்குறைப்புச் செய்தமையால் அந்நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர்.
கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்தே இவர் நேற்றைய தினம் தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் போட்டி
மீண்டும் இடம்பெறவுள்ள பிரதமர் தெரிவு போட்டியில், சுனக் மட்டுமல்லாது, பென்னி மோர்டான்ட், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட்டின் மற்றும் பொரிஸ் ஜோன்சன் ஆகியோரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் நியமனம் செய்த கடைசி பிரதமர் லிஸ் ட்ரஸ். கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் நியமித்தார்.
ஸ்காட்லாந்த் அரண்மனையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மகாராணி எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர் வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் பதவியை ஏற்றார். பிரதமராக வந்ததும் அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
மிகக்குறைந்த நாட்கள் பிரதமர் பதவி
இருப்பினும், அது பிரித்தானிய பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் லிஸ் ட்ரஸுக்கு அழுத்தம் அதிகரித்தது. அவரது அமைச்சரவையில் இருந்து இரு அமைச்சர்கள் வெளியேறினர்.
கட்சிக்கு உள்ளேயே அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக எல்லாம் பேச்சு எழுந்தது. இந்நிலையில், நேற்று லிஸ் டிரஸ் திடீரென பதவி விலகல் செய்துள்ளார்.
கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.
இதேவேளை தான் ஒரு போராளி பிரச்சினையைக் கண்டு அஞ்சி ஓடுபவர் இல்லை என்று தெரிவித்து 24 மணி நேரத்திற்குள் அவர் தனது பிரதமர் பதவியை துறந்துள்ளார்.
தன்னை எதற்காகப் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தார்களோ அதை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதால் பதவி விலகல் செய்வதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், அடுத்த பிரமரைத் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.