
ஐரோப்பிய நாடுகள் ஆதரவு.
காசா புனரமைப்பிற்கு அரபு நாடுகளின் திட்டத்திற்கு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், அரபு நாடுகள் முன்வைத்த 53 பில்லியன் டொலர் மதிப்புள்ள காசா புனரமைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். |
இத்திட்டம் பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்யாமல், காசாவின் வாழ்வாதார நிலையை விரைவாகவும் நிலையான முறையிலும் மேம்படுத்தும் ஒரு நடைமுறைக்குரிய தீர்வாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் எகிப்தால் வடிவமைக்கப்பட்டு, அரபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இது காசாவில் ஒரு தற்காலிக நிர்வாகக் குழுவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. சுயாதீனமான தொழில்நுட்ப நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் இந்த குழு, காசாவின் அரசியல் நிர்வாகத்தை மேற்கொள்வதுடன், அங்கு உதவி மற்றும் மேலாண்மையை பொறுப்பேற்கும். ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் திட்டம், காசாவை ஒரு Middle East Riviera-வாக (ஆடம்பர கடற்கரை சுற்றுலா பகுதி) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நான்கு ஐரோப்பிய நாடுகளும் அரபு நாடுகளின் முயற்சியை ஆதரிக்க முன்வந்துள்ளன. அரபு நாடுகள் எடுத்த நடவடிக்கை ஒரு முக்கியமான தீர்வாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், "ஹமாஸ் இனி காசாவை நிர்வகிக்கக் கூடாது, அதுவே இஸ்ரேலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது" என்றும், "பாலஸ்தீன அதிகாரபூர்வ நிர்வாகம் (Palestinian Authority) முக்கிய பங்கு வகிக்க வேண்டும்" என்றும் அவர்கள் தெரிவித்தனர். |