நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றது!

13.07.2026 13:18:27

நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றிலும் பயனற்றது என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    

 

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு 159 உறுப்பினர்களின் பலம் காணப்படுகின்றது.

அதனுடன் ஜனாதிபதியையும் சேர்த்தால் 160 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஒரே கொள்கையுடையவர்களாகவே செயற்படுகின்றனர்.

எனவே, அவர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக எளிதாகத் தோற்கடித்து செயலிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகப் பலவீனம் மற்றும் தளர்வுப் போக்குக் காரணமாகவே நாட்டின் சிறைச்சாலைகள் இந்த அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அண்மையில் தற்போதைய நீதி அமைச்சர் பாராமன்றத்துக்குள் பகிரங்கமாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கோரியிருந்தார்.

அரசியல் ரீதியாகப் பக்குவப்படாத, இன்னும் சிறு பிள்ளைத் தனமாகச் செயற்படும் ஒருவரால் இவ்வாறான பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாள முடியாது. வயது முதிர்ந்து, அறிவுப் பக்குவம் ஏற்படும் போதே ஒருவருக்குச் சிறந்த நிர்வாகத் திறன் கிட்டும்.

தற்போதைய நீதி அமைச்சர் மீது நான் ஆரம்பத்தில் ஒரு நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தேன். ஏனெனில், அவரது தந்தை ஒரு சிறந்த மனிதராகவும், மதிக்கத்தக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.

அத்தகைய கௌரவமான ஒரு தந்தைக்கு, இவ்வளவு அறிவற்ற முறையில் செயற்படும் ஒரு மகன் இருப்பார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

பாராளுமன்றத்துக்குள் மட்டும் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வெளியில் தப்பித்துக் கொள்ளும் இவ்வாறான அமைச்சர்களின் செயல்பாடுகள் நீதி அமைச்சுக்கே பெரும் அவமானத்தைத் தேடித்தருகின்றன.

நாட்டின் சிறைச்சாலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு வெறும் கண்ணீர் சிந்துவதோ அல்லது அழுது நாடகமாடுவதோ தீர்வாகாது. அதற்கான தகுந்த நடைமுறைச் சாத்தியமான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளையே அவர்கள் கண்டறிய வேண்டும் என்றார்.