
நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (26) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய பயணிகள் கூடத்தின் (டெர்மினல்) திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக அவர் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.
பிரதமரின் தமிழக வருகையின் போது மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் மோடி நாளை மறுதினம் 27ஆம் திகதி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் “ஆடி திருவாதிரை” விழாவில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோழப் பேரரசர் இராஜேந்திர சோழனின் சாதனைகளை நினைவு கூறும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் இப் பயணத்தை முன்னிட்டு, 2,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் சுற்றுப்பயணத்திற்கு மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.