தவெகவினர் மீது பாய்ந்தது வழக்கு!

15.07.2025 07:52:29

சென்னை வேதானந்தா சாலையில் அஜித் குமார் மரண வழக்கு மற்றும் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 21 பேரின் மரணத்துக்கும் நீதி கேட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில் அந்த சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன்கள் சேதமடைந்துள்ளன. ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அந்த இடங்களில் செடிகள், இரும்பு கம்பிகள் உடைந்து கிடந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் இச்சம்பவத்தில் தவெகவினர் மீது திருவல்லிக்கேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவெகவினர் அடித்து உடைத்ததால் சேதமடைந்ததாக கூறப்பட்ட இடத்தினை மீண்டும் சீரமைத்து தருவதாக மாநகராட்சிக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே தவெகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் கண்டன ஆர்ப்பாட்டம் தவெக சார்பில் அஜித் குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை, சிவானந்தா சாலையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் தலைமை தாங்கினார். கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் பங்கேற்ற ஆர்ப்பாட்ட பொது நிகழ்வு என்பதால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.

இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கருப்புநிற டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்து விஜய் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். 'சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை அவர் கையில் வைத்திருந்தார். அவருடன், போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் 'வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்' என்று கோஷம் எழுப்பினர். தவெக ஆர்ப்பாட்ட மேடை திறந்தவெளி லாரியை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் நின்றபடி, விஜய் உரையாற்றினார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக குவிந்த தவெக தொண்டர்களால் சிவானந்தா சாலையே திக்குமுக்காடிப் போனது. விஜய் மேடைக்கு வந்த நேரத்தில் அவரை பார்க்க நினைத்து ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் செல்ல முயன்றனர்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சாலையில் நடுவே இருந்த சென்டர் மீடியன்களில் ஏறி நின்றதாகவும், இப்படி ஒருவர் பின் ஒருவராக ஏராளமானோர் நின்றதில் கம்பிகள் சரிந்துவிழுந்துள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த செடிகளையும் மிதித்து துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு வேதானந்தா சாலையில் சென்டர் மீடியன்கள் சேதம் அடைந்து கிடந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சேதம் அடைந்த சென்டர் மீடியன்களை சரி செய்து தருவதாகவும் இதற்கு அனுமதி தருமாறும் தவெக சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. எனினும் போராட்டம் நடத்திய தவெகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை நடுவே இருந்த தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் சேதப்படுத்திய சம்பவத்தில், "பொது சொத்தை சேதப்படுத்துதல்" என்ற பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.