அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!
|
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். |
|
அவரால் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எம்முடைய ஆட்சியில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம்" என தற்போதைய ஜனாதிபதி அவரது ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது தமிழர்களுக்கு கொடுத்த அரசியல் வாக்குறுதியாகும். இதனை நிறைவேற்றுவதைவிடுத்து காலத்தை இழுத்தடிப்பு இன்று வரை காலம் தாழ்த்துவது என்பதும் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது என்பது அரசியல் வாக்குறுதி கொலையாகும். இதனையே கடந்த கால ஆட்சியாளர்களும் செய்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்தப் போதும் கடந்த கால ஆட்சியாளர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை.அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றே சிந்தித்தனர். தற்போதைய ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என கூறியபோது அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பமும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ந்தனர். அதற்கு தமிழர்கள் தம் வாக்குகளை அள்ளி வழங்கி நன்றி தெரிவித்தார். அந்த நன்றி உணர்வின் மீது தற்போதைய அரசாங்கம் மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அமைதியோடு பார்க்கும் நிலையிலும் தமிழர்கள் இல்லை எனலாம். பாதாள உலகை வளர்த்துவிட்டு அதனோடு கைகோர்த்து அரசியல் செய்தவர்கள்; சர்வதேச போதை வஸ்துக்கு இலங்கையில் சந்தையை உருவாக்கி உழைத்தவர்கள், அவர்களின் அரசியல் காவலர்களாக உள்ளவருமே பயங்கரவாதிகளாவர். ஜனாதிபதியின் கூற்றின் படி அவர்கள் சுதந்திரமாக நாடாளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டு சுகபோகும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களே பயங்கரவாதிகளாவர். இந்நிலையில் இன விடுதலையை மையப்படுத்தி தேச விடுதலைக்காக செயற்பட்டவர்களை பயங்கரவாதிகள் என கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பதில் எந்த விதமான நியாயம் இல்லை எனலாம். தற்போது சிறையில் பத்திற்கும் குறைவான அரசியல் கைதிகளே உள்ளனர். இவர்கள் சமூக குற்றவாளிகள் அல்ல. பாதாள உலகில் அங்கத்தவர்களும் அல்ல. போதை வஸ்துக்கு அடிமையினவர்களுமல்லர். அதன் விநியோகஸ்தர்களும் அல்ல.இயக்க கட்டுப்பாட்டுக்குள் அதன் ஒழுக்க நெறிகளை பின்பற்றிய ஒழுக்க சீலர்களாவர். இவர்களை விடுவிப்பதன் மூலம் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம். தற்போதைய அரசியல் கைதிகள் அனைவரும் தண்டனை காலத்தை விட அதிகமான காலத்தை சிறைகளுக்குள் கழித்துவிட்டனர். தற்போது நிலையில் இவர்களுடன் சேர்ந்து இவர்களது குடும்பங்களும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உதாரணமாக ஆனந்த சுதாகரன் கடந்த 17 வருட காலமாக சிறையில் இருக்கின்றார். இவரது மனைவி கணவரின் சோகம் தாளாது மரணத்தை தழுவிய நிலையில் குழந்தைகள் தாயை இழந்து பாட்டியியின் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பற்ற வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு அவர்களும் தண்டனையை அனுபவிப்பது சமூக குற்றமாகும்.ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அறிவித்தப் போதும் அது நடக்கவில்லை. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதன் மூலம் க்ஷ குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க முடியும். அதனை தற்போதைய ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து தமிழ் மக்களின் அரசியல் கௌரவத்தையும் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுமாறு கேட்கின்றோம். தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம். தமிழர் தாயக அரசியல் பலமடைந்து முன் செல்வதற்கான உறுதி ஏற்று சுடரேற்றுவதன் மூலம் தமிழ் தேசம் ஒளி வீசும். அதுவே மாவீர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனும் தமிழர் தாயகத்திற்கு கடமையுமாகும் என்பதை உணர்வோம். |