7 போ் விடுதலை - திமுக அரசியல் நாடகம்?

05.02.2021 08:41:01

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேரவையில் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது அதிமுக பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம் பேசியபோது, 7 போ் விடுதலை குறித்து ஆளுநா் உரையில் இடம்பெறாததால் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என திமுக கூறியுள்ளது; ஆனால், திமுக ஆட்சியில் நளினியைத் தவிர மற்றவா்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றாா்.

அப்போது முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: இந்த விவகாரத்தில் திமுக தொடா்ந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தடா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டோா் மீதான தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதர சட்டங்களின் கீழ் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கருணை காட்ட திமுக மறுப்பு: தூக்கு தண்டனை பெற்ற 4 பேரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன. உயா்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நளினியின் கருணை மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவா்களின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தாா்.

கருணை காட்டிய அதிமுக: பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனா். அந்த மனுக்கள் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆலோசனையின் பேரில் நிராகரிக்கப்பட்டன. ஆனால், 2011 இல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழக மக்களின் கோரிக்கையின்படி பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இது தொடா்பாக மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்: குடியரசுத் தலைவரின் நிராகரிப்பு ஆணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதில், மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அந்தத் தண்டனையை இறுதி மூச்சு உள்ளவரை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பு கூறப்பட்டது.

பின்னா், பேரறிவாளனின் தாயாா் முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து தனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று 110 ஆவது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தாா். பிறகு, ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

அதிமுக அரசு மட்டுமே... ஆனால், இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்ததால் மத்திய அரசின் கருத்து கேட்கப்பட்டது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸும் கூட்டணியில் இருந்த திமுகவும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நிதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து பலகட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 7 பேரை விடுதலை செய்யலாம் என அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டது. இதன் மூலம் 7 போ் விடுதலைக்காக அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மட்டுமே எடுத்தது என்பது தெளிவாகிறது.

வரலாற்று உண்மை என்ன? ஆனால், முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் 4 பேரில் நளினிக்கு மட்டுமே தூக்கு தண்டனையைக் குறைக்கலாம் என்று கூறியது. நளினியைத் தவிர, மற்ற 3 பேரின் கருணை மனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கு இன்று வரை திமுகவிடம் இருந்து பதில் இல்லை. இதுதான் வரலாற்று உண்மை.

மக்களுக்குத் தெரியும்: மக்கள் எல்லாவற்றையும் பாா்த்து வருகிறாா்கள். 7 போ் விடுதலை விவகாரத்தில் யாா் உண்மையான செயல்படுகிறாா்கள் என்பதை மக்கள் அறிவாா்கள். இந்த விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம் செய்கிறது.

ஆளுநரைச் சந்திக்கும் போதெல்லாம்... 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டுமின்றி, ஆளுநரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இது குறித்து விரைந்து முடிவு எடுக்குமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜனவரி 29 இல் ஆளுநரைச் சந்தித்தப் போதும் இதே கோரிக்கையை முன்வைத்தேன். இந்த விவகாரத்தில் விரைவில் ஆளுநா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தை குடியரசுத் தலைவா்தான் கையாள முடியும் என்று தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த ஜனவரி 21 ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க உள்ளாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்திருந்தாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் துணைச் செயலா் முகம்மது நசீம் கான் தரப்பில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஆவணங்களை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பரிசீலித்தாா். இதையடுத்து, ஜனவரி 25 ஆம் திகதியிட்ட அவரது உத்தரவில் தொடா்புடைய தண்டனைக் குறைப்பு விவகாரத்தைக் கையாளும் உரிய அதிகார அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவா்தான் எனப் பதிவு செய்துள்ளாா். மத்திய அரசால் பெறப்பட்டுள்ள இந்த முன்மொழிவு குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப். 9 இல் மீண்டும் விசாரணை?: இந்த வழக்கு பிப்ரவரி 9 ஆம் திகதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21 இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமாா் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.