கொரோனா சந்தேகம் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது
புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய நபர் ஒருவரின் ஜனாஸா புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று (10) காலை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் வேப்பமடுவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவரின் ஜனாஸாவே இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி தனது வீட்டில் காலமான குறித்த நபர், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை அவரது மனைவி சித்தி அஜீபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) திங்கட்கிழமை நண்பகல் வேளையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஒரேநாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இரவரது ஜனாஸாக்கள் நல்லடக்கத்திற்காக புத்தளத்திலிருந்து ஓட்டமாவடிக்கு கடந்த புதன்கிழமை (08) அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 4 ஆம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அதனையடுத்தே ஜனாஸா
தோண்டியெடுக்கப்பட்டது.