அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார!

30.05.2024 14:32:33

”ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும்” என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கருத்தானது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விளக்கமொன்றை வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரது இக் கருத்தானது, சமகால அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், சுருக்கமான செய்தியாளர் சந்திப்பொன்றை பாலித ரங்கே பண்டார நடத்தியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாலித ரங்கே பண்டார  ” கடந்த செவ்வாய்க்கிழமை இதே இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடத்த சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என்பது தொடர்பான கருத்தை வெளியிட்டிருந்தேன்.

இக் கருத்துத் தொடர்பாக சமூகத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிறிகொத்த கட்சி தலைமையத்திற்கு வருகை தந்திருந்த 7 பேர் கொண்ட குழுவினர் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவரது கேள்விகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இதே இடத்தில் நான் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவுள்ளேன். அன்று எந்தவொரு கேள்வியையும் என்னிடம் கேட்கலாம்” இவ்வாறு பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related