
ஆனந்தசங்கரிக்கு மனோ, சுமந்திரன் வாழ்த்து!
கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் செவ்வாய்கிழமை (13) ஒட்டாவா நகரில் நடைபெற்றது. அதன்படி கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக்கொண்டார். அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு 'சகோதரரே, வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். சிறப்பாகச் செய்வீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். நாம் தொடர்பில் இருப்போம்' என வாழ்த்துக் கூறியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேவேளை பொதுப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். |