நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகிறது- சஜித்

04.08.2021 06:38:31

நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகிறது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கமைய , நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகின்றது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா?

இதேவேளை, உலகம் முழுவதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபுகள் என்ன? அவற்றில் நாட்டில் பதிவாகியுள்ள திரிபுகள் எவை? தற்போது நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள் குறித்த திரிபுகளை எதிர்கொள்ளக் கூடியனவா?

மேலும், ஒரு கொரோனா அலை உருவாகி வரும் நிலையில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒழுங்குவிதிகளைத் தளர்த்துவது பொருத்தமானதா? சகல அரச ஊழியர்களும் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாப் பரவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டிய தொற்றா நோயுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் சிறிய பிள்ளைகள் உள்ள உத்தியோகத்தர்கள் அந்த ஆபத்துக்குள் தள்ளப்பட மாட்டார்களா?

அத்துடன் தற்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, தொற்றால் சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான புள்ளி விபரங்களைச் சமர்ப்பிப்பீர்களா?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

.