நோர்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

26.06.2022 07:25:53

நோர்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்து உள்ளனர்.

நோர்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஒஸ்லோவில் உள்ள, 'லண்டன் பப்' எனப்படும் மதுபான விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சுடப்படும் சத்தம் கேட்டது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் அந்த மதுபான விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக ஈரானை பூர்வீகமாக உடைய நோர்வேயைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து பொலீசார் விசாரித்து வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்றும் பொலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ஓரினச் சேர்க்கையாளர்கள் நடத்தவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.