ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த கோரி மீண்டும் ஒரு மனு தாக்கல்!

12.07.2024 08:33:20

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும் 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

இதில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள்,நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாலும் ஜனாதிபதி கையொப்பமிடாததாலும் இந்த திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என்றும் 19வது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அண்மையில் சமிந்திர தயான் லெனவ என்பவரால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளினால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.