பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!

28.05.2026 08:28:11

உக்ரைனுக்கு எதிரான போரில் 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 500000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது படுகாயமடைந்து இருக்கலாம் என்று பிரித்தானியாவின் முன்னணி உளவு அமைப்பான GCHQ இயக்குநர் ஆன் கீஸ்ட் பட்லர்(Anne Keast Butler) தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை GCHQ இயக்குநர் ஆன் கீஸ்ட் பட்லர் தன்னுடைய முதல் பொது உரையின் போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த உரையின் போது ரஷ்யாவினால் பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், பிரித்தானியா தன்னுடைய வரலாற்றில் மிக முக்கியமான தருணத்தில் இருப்பதாகவும், பிரித்தானியாவின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைக்க ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் ரஷ்யாவின் உளவு நடவடிக்கையை குறிப்பிட்டு பேசிய GCHQ இயக்குநர் ஆன் கீஸ்ட் பட்லர், பிரித்தானியா மற்றும் நேட்டோ நாடுகள் மீது ஹைப்ரிட் போரை ரஷ்யா நடத்தி வருவதாகவும் எச்சரித்துள்ளார்.