எகிப்து தூதுவர் பிரதமரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு.

12.08.2026 15:13:00

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹீம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (11) திகதி அலரிமாளிகையில் சந்தித்துள்ளார்.

 

இதன்போது, இலங்கை – எகிப்து நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

 

தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.