மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டாம்"

15.10.2025 14:08:10

கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான இறக்குமதி வரிகளை நீக்கக் கூடாது என்று ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இந்தக் கருத்தை கனடாவின் எம்பயர் கிளப் நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார். சாஸ்காட்சுவான் மாகாண முதல்வர் ஸ்கொட் மோ மற்றும் மானிடோபா முதல்வர் வாப் கினூவ் ஆகியோர் வரிகளை நீக்க வேண்டுமென கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தங்களது மாகாணங்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி இந்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவிதமாக தாமும் தமது மாகாணத்தின் நலன்களை பேணும் கடப்பாட்டின் அடிப்படையில் சீன மின்சார வாகனங்களுக்கான வரிகள் நீக்கப்படக் கூடாது என கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

“அவர்களின் நிலைப்பாட்டை மதிக்கிறேன். ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த சூழ்நிலையிலும் அது நடக்கக் கூடாது,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100% சுங்கவரி விதித்துள்ளது.

அதற்கு கூடுதலாக சீன உருக்கு மற்றும் அலுமினியத்திற்கும் 25% வரி அமலில் உள்ளது.