விசாரணையால் உயிருக்கு ஆபத்து.
மாற்றங்களைச் செய்யும்போது சவால்களும் நெருக்கடிகளும் வரும். ஆனால், அவற்றுக்கு அச்சப்பட முடியாது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் புலனாய்வுத்துறையினரிடம் நடத்தப்படுகின்றன.
அவர்கள்தான் எனக்கும் பாதுகாப்பளிக்கின்றனர். இந்த விசாரணைகளால் எனக்கும் ஆபத்து உள்ளதென்பதை நான் அறிவேன். ஆனாலும் சிலவற்றை செய்தாக வேண்டும். எனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை அரசியலமைப்புக்கப்பால் பயன்படுத்த மாட்டேன். ஆட்சி பீடத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்பில் இந்தப் பதவிக்கு வரவில்லை.
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு ஆபத்தையும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதையும் அறிவேன். ஆபத்துகளை ஏற்காமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நம்பவில்லை. ஆபத்துகளைச் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். அந்த ஆபத்துகளின்மத்தியில் எனக்கு பதவி பறிபோகுமாக இருந்தால், முழு மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராகவே இருக்கிறேன்’’ என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருக்கையில், அதற்கு முன்னர் அறிக்கைகள் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள மட்டேன். அது பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எனது நம்பிக்கையாகும். ஆனால் கருத்துரிமைக்கான முழு சுதந்திரமும் இருக்கிறது.
எனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் இருக்கும் அதிகாரத்தையோ பயன்படுத்தி அரசியலமைப்புக்கு அப்பால் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க மாட்டேன். அரசியலமைப்பு திருத்தத்தினால் ஏனைய ஜனாதிபதிகளை போன்று நானும் வெளியேற நேரிடுமென்று நீங்கள் எனக்கிருக்கும் ஆபத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். நான் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவ தற்கு தயாராகவே இருக்கிறேன். ஆட்சி பீடத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்பில் இந்தப் பதவிக்கு வரவில்லை.
அதேபோன்று, மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு ஆபத்தையும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். ஆபத்து இல்லாமல் மாற்றமொன்று ஏற்படுமென்றும் நம்பவில்லை. ஆபத்துகளின் மத்தியிலேயே எப்போதும் மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. எனது பாதுகாப்புக்கும் அவர்களே பொறுப்புக் கூறவேண்டும். நானும் விசாரணைகளுக்குச் செல்கிறேன். அதனூடாக உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதையும் அறிவேன்.
ஆபத்துகளை ஏற்காமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்பவில்லை. ஆபத்துகளை சந்திக்க தயாராகவே இருக்கிறேன். அதுவும் இந்த நாட்டு மக்களுக்காக என்பதையும் நம்புகிறேன். அந்த ஆபத்துகளின் மத்தியில் எனக்கு பதவி பறிபோகுமாக இருந்தால், முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறேன்.
சிறப்புரிமைகளின் வரையறைகள் எவ்விடத்திலிருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். தம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் எதிர்காலத்தில் தலைமை நீதியரசர் கதிரையில் அமர முற்படுவது எவ்வாறு சிறப்புரிமை இல்லாமல் போகும்? ஆனால் அவ்வாறு இடம்பெற்ற வரலாறுகளும் இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தனி நபரொருவரை அடிப்படையாகக்கொண்டு இடம்பெற்ற சிறப்புரிமைகளாகும்.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 11 இலிருந்து 17 வரை அதிகரிக்கிறார்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியர்களின் எண்ணிக்கையை 12 இலிருந்து 20 வரை அதிகரிக்கிறார்கள் என்றால், தம்மால் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்று நீதிமன்ற நியமனங்களை இலக்கு வைத்து இதனை செய்தார்களா என்றும் பொருள் கொள்ள முடியும்.
நீதித்துறையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு மாற்றமும் சிறப்புரிமை அல்லது இன்னுமொரு நபர் மீது முன்னெடுக்கப்படும் தேவையற்ற தலையீடு என்று பொருள் விளக்க முடியும். ஆனால் அப்படியொன்றும் இல்லை என்பதை நம்புகிறோம். சம்பள உயர்வு முதல் வாகன அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொடுத்தல் வரை சிறப்புரிமையாக விளக்கப்படுத்த முடியும்.
ஆனால், இந்த அரசியலமைப்பு திருத்தத்தை தனிநபரொருவரின் சிறப்புரிமையாகக் கொள்ள மாட்டேன். மாறாக, முழு நீதிமன்ற கட்டமைப்பையும் தற்போது இருக்கும் நிலைமையிலிருந்து அடுத்தக்கட்டத்துக்கு மாற்றியமைப் பதாகவே நான் கருதுகிறேன். எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை நடைமுறைக்கு வரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாராவது ஒருவர் ஓய்வில் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது அல்லது யாராவது ஒருவருக்கு சாதகமாகவும் அமையலாம்.
நீதித்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களை ஒரு மாதத்துக்கு நிறைவு செய்வோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் 23 ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 3,000 சாட்சியாளர்கள் இருக்கிறார்கள். மேல் நீதிமன்றங்களிலுள்ள நீதிபதிகளே இந்த வழக்கை விசாரணை செய்யும் மூவரங்கிய நீதிபதிகள் அமர்வில் இருக்கிறார்கள்.
தற்போது அந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இது நீதிக்கான மக்களின் எதிர்பார்ப்புகளுக்குரிய வழக்கு என்பதால் மேல்நீதிமன்ற நீதிபதியை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமிக்க வேண்டும் என்று எண்ணினோம். அந்த ஒரு விடயமே இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றத்திலுள்ள சிக்கல்கள் ஓரளவு குறைந்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு உயர்நீதிமன்றத்துக்கு பதவியுயர்வு வழங்குவது பொருத்தமற்றது என்று எண்ணினேன். தனிப்பட்ட நபரொருவரை எதிர்பார்த்து இந்தப் பதவி வெற்றிடங்களை ஏற்படுத்த நான் முயற்சிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரைவில் நிறைவுக்கு வருமென்ற அறிக்கை வெளியாகியிருந்தது. அதற்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
தேவையென்றால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளை கிடப்பில் போடப்பட்டிருக்க முடியும். இந்த வழக்கில் சாட்சியாளர்கள் மாத்திரம் 3, 000 பேர் இருக்கிறார்கள். அப்படியென்றால், மீண்டும் யார் இந்த வழக்கை விசாரணை செய்வது, எப்போது மக்களுக்கு நீதி கிடைக்கும்.
விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகம் கொழும்பில் மாத்திரமே இருக்கிறது. அதற்கு பதிலாக நாடு முழுவதும் 24 அலுவலகங்களை ஆரம்பித்ததற்கும் அதிகாரிகளை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதிக கொடுப்பனவுகளை வழங்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்திலும் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது. அதனால், புதிதாக 10,000 பொலிஸ் அதிகாரிகளை சேவைக்கு இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம். மேன்முறையீட்டு நீதிமன்றங்களை சில வருடங்களுக்கு மாகாண மட்டத்தில் அமைப்பதற்காக அரசியலமைப்பில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிகாரங்கள் பரவலாகாது. நால்வரை அதிகரிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேல்நீதிமன்றத்திலும் அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புதிதாக 11 மேல்நீதிமன்றங்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளோம். அப்படியென்றால், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள 110 பேரின் எண்ணிக்கையை 120 வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் அடிப்படையில் நீதிபதிகளின் நியமனங்களுக்கும் அடுத்தடுத்து இடம்பெறும்.
நீதிவான் நீதிமன்றங்களுக்கு புதிதாக 50 நீதிவான்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நியமனங்களில் என்னால் தலையிட முடியாது. தொழிற்துறைசார்ந்தவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும். நீதிபதிகளுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண வரவு செலவுத் திட்டத்தினூடாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.