
தீர்ப்பு கொடுத்ததற்காக விமர்சிக்கின்றனர்!
நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்காக நீதிபதிகளையே பலர் விமர்சிப்பதாக நீதிபதி செந்தில்குமார் கவலையுடன் பேசியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் க்ரிஸில்டா என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
அவர் படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்க தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் “சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளையே விமர்சனம் செய்கின்றனர்” என கூறி இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
சமீபத்தில் நீதிபதி செந்தில்குமார் தவெக தலைவர் விஜய் தொடர்பான வழக்கில் அளித்த உத்தரவு தொடர்பாக விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், அதைதான் இந்த வழக்கில் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.