பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி..!
பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.
சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், 'இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்' என கூறப்பட்டுள்ளது. நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.