தடுக்கி விழுந்த ஜேர்மானியர்: நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு
காலையில் எழுந்த ஜேர்மானியர் ஒருவர், தன் வீட்டில் கணினி வைக்கப்பட்டுள்ள அறைக்குச் செல்லமுயன்றபோது தடுக்கி விழுந்து முதுகெலும்பில் அடிபட, அது பணியின்போது நடந்த விபத்துதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத ஜேர்மானியர் ஒருவர் வீட்டிலிருந்தவண்ணம் அலுவலகப் பணி செய்துகொண்டிருந்திருக்கிறார். காலையில் எழுந்த அவர், பணி செய்யும் கணினி இருந்த அறைக்குச் செல்லும்போது படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்திருக்கிறார்.
அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட, சிகிச்சை பெற்ற அவர் காப்பீடு கோரி விண்ணப்பிக்கும்போது அவரது அலுவலகம் சிகிச்சைக்கான பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறது. அவர் நீதிமன்றம் செல்ல, இரண்டு கீழ் நீதிமன்றங்களும் அவருக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளன.
அதைத் தொடர்ந்து, அவர் Kasselஇலுள்ள பெடரல் சமூக நீதிமன்றத்துக்குச் செல்ல, சமூக பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மேற்பார்வையிடும் அந்த நீதிமன்றம், அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
காலையில் எழுந்ததும் ஒருவர் படுக்கையிலிருந்து பணி செய்யும் அறைக்கு செல்வதும் பணிக்குச் செல்வதுதான். அதுவும் காப்பீட்டின் கீழ் வரும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், அந்த பணியாளர், காலையில் எழுந்ததும், காலை சிற்றுண்டி கூட உண்ணாமலே பணியைத் துவக்குவது வழக்கம் என்ற விடயத்தையும் நீதிமன்றம் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.