சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார் முதல்வர் விஜய்!

15.08.2026 11:15:19

80-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில் காவலர்கள் உள்ளிடோருக்கு பதக்கங்கள் வழங்கியும் சுதந்திரதின உரையும் விஜய் நிகழ்த்துகிறார். சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

  

சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றி உரையாற்றுவார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் முதல் முறையாக இன்று மூவர்ணக்கொடி யேற்றுகிறார். இன்று காலை 8.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து முதல்வர் விஜய் புறப்படுகிறார். மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை வந்ததும், சென்னை போலீசார் பைக்கில் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வருவார்கள். காலை 8..35 மணியளவில் கோட்டை கொத்தளத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு விஜய் வருவார்.

அவரை தலைமை செயலாளர் சாய் குமார் வரவேற்பார். அதன்பிறகு மேடைக்கு வரும் விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இதனைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை விஜய் பார்வையிடுவார். முதல் முறையாக கொடி ஏற்றும் விஜய் அதன்பிறகு கோட்டை கொத்தளம் செல்லும் முதல்வர் விஜய், காலை 8.45 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். தேசியக்கொடி ஏற்றி வைத்த பிறகு மக்களுக்கு உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் பற்றியும் முதல்வர் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் தனது உரையில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, காவல்துறையினருக்கு பதக்கம் உள்ளிட்டவைகளை வழங்குகிறார்.

பலத்த பாதுகாப்பு முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் தேசியக்கொடி ஏற்ற உள்ளார் என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடற்கரை சாலையில் விழாவைக் காண பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஸ் இல்லாமல் வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், கடந்த இரு தினங்களாக போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள்னர். தங்கும் விடுதிகளிலும் தீவிர ஆய்வு பெற்றது.