விலகிச் சென்றவர்களை மஹிந்த இணைத்துக் கொள்ள வேண்டும் -

27.03.2024 08:20:35

மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும்,மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.ஆகவே பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என்பதை மஹிந்த ராஜபக்ஷவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோல்வி அடைந்து முழு நாட்டையும் பழிகொடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதைய அரசாங்கத்தை பலவீனப்படுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அரச தலைவர் என்ற அடிப்படையில் அதனை கோட்டபய ராஜபக்ஷ வெற்றிக் கொள்ளவில்லை.

தற்போதைய அரசியல் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும்,மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இருப்பினும் இந்த செல்வாக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் அளவுக்கு உயர்வடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள்.குறைப்பாடுகள் திருத்திக் கொள்ளப்படவில்லை.மாறாக இவர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமாக இருந்தவர்கள் பல்வேறு காரணிகளினால் இன்று விலகிச் செயற்படுகிறார்கள்.இவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் சகல உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.