தடுப்பூசி போட்டால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி

16.01.2022 05:49:31

புதுச்சேரியில் பயிலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 80 ஆயிரம் மாணவர்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்படி பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் துவங்கி நடந்து வருகிறது.

நேற்று வரை 60 சதவீத பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் இன்னும் ஐந்து நாட்களுக்குள் மீதமுள்ள 40 சதவீதம் பேருக்கு வேகமாக தடுப்பூசிபோட சுதாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இருப்பினும் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் இல்லாததால் இம்மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு பள்ளி கல்வித் துறைக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.அதில் 2004 ஆண்டு முதல் 2007ம் ஆண்டிற்குள் பிறந்த 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களில் 40 சதவீத பேர்இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இல்லாததால் இம்மாணவர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.மக்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி வருகிறது.

எனவே பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை தெரிவித்து அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.இதேபோல் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் அறிவுறுத்தி, 100 சதவீத தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற இலக்கினை எட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.