2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

30.05.2022 07:51:09

காஷ்மீரில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இரவு முழுவதும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் கண்டிப்பூரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்று இரவு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை, காலை வரை நீடித்தது.

 இதில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாதிகள் தங்கி இருந்த கட்டிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 13ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் உள்ள குடோராவில் கான்ஸ்டபிள் ரியாஸ் அகமது தோகர் தீவிரவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் காவலரை சுட்டுக் கொன்ற தீவிரவாதியே இன்று காலை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல ஐஜி விஜய் குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.