30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த மருத்துவர்.

19.12.2025 14:00:46

பிரான்சில், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் ஒருவர், 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். அவர்களில் 12 பேர் உயிரிழந்துவிட்டார்கள்! பிரான்சிலுள்ள பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றிவந்தவர் பிரெட்ரிக் (Frédéric Péchier, 53). பிரெட்ரிக் பணி புரிந்த மருத்துவமனைகளில் எல்லாம், அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே இவர் சென்று அந்த நோயாளிகளைக் காப்பாற்ற, இவரை ஹீரோவாக பார்த்துள்ளார்கள், நோயாளிகளும் சக மருத்துவர்களும்.

    

 

அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுவது அபூர்வம். ஒரு லட்சத்தில் ஒரு நோயாளிக்கு அப்படி நடக்கலாம். ஆனால், பிரெட்ரிக் பணி புரிந்த மருத்துவமனைகளில் எல்லாம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு, மருத்துவர்கள் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்ட குளூக்கோஸில் எக்கச்சக்கமான பொட்டாஷியம் குளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததால், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் இறங்க, அவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரியவந்தது. பிரெட்ரிக் பணி புரிந்த ஒரு மருத்துவமனையில் இப்படி தொடர்ச்சியாக சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிரெட்ரிக் தற்காலிகமாக வேறொரு மருத்துவமனையில் பணி புரியச் செல்ல, இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது நின்றுவிட்டது.

ஆனால், பிரெட்ரிக் தற்காலிகமாக பணி புரியச் சென்ற மருத்துவமனையில், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது துவங்கியுள்ளது.

பின்னர் மீண்டும் பிரெட்ரிக் பழைய மருத்துவமனைக்கே பணி புரியவர, மீண்டும் அங்கு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது மீண்டும் துவங்கியுள்ளது.

விடயம் என்னவென்றால், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் பிரெட்ரிக் ஓடி வருவாராம். வந்து நோயாளிக்கு சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்ற முயல்வாராம்.

ஆக, இப்படி அறுவை சிகிச்சை செய்யும்போது யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டாலே, அவரைக் காப்பாற்ற சக மருத்துவர்கள் பிரெட்ரிக்கின் உதவியை நாடுவதுடன், அவரை ஹீரோவாகவும் பார்த்துள்ளார்கள்.

ஆனால், உண்மையில், உதவி மயக்க மருந்து நிபுணராக பணியாற்றிவந்த பிரெட்ரிக், முன்கூட்டியே அறுவை சிகிச்சை அறைக்கு சென்றுவிடுவாராம்.

அங்கு நோயாளிக்கு ஏற்றுவதற்காக வைத்துள்ள குளூக்கோஸில் ரசாயனம் ஒன்றைக் கலந்துவிடுவாராம் பிரெட்ரிக்.

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது மாரடைப்பு ஏற்பட, உடனே இவர் வந்து நோயாளியைக் காப்பாற்றுவாராம்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் ரசாயானம் ஏற்றிய 30 நோயாளிகளில் 12 பேரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்.

கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக வந்த பிரெட்ரிக்கை, நீ மருத்துவர் அல்ல, குற்றவாளி, மருத்துவ உலகுக்கே அவமானத்தைக் கொண்டு வந்துள்ள கொலைகாரன், மருத்துவமனையை கல்லறையாக மாற்றிவிட்டாய் என சட்டத்தரணிகள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

தற்போது பிரெட்ரிக்குக்கு 22 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரெட்ரிக் சிறையிலடைக்கப்பட்ட செய்தி அறிந்து, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.