சீனாவிற்கு படையெடுக்கும் நாடொன்றின் காபி நிறுவனங்கள்!

04.08.2025 08:19:39

சீன சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய 183 புதிய பிரேசிலிய காபி நிறுவனங்களுக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக பிரேசிலில் உள்ள சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரேசிலிய காபி மற்றும் பிற பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அதிக வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

வெளியான தகவலின் அடிப்படையில், புதிய சீன ஏற்றுமதி அனுமதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றே கூறப்படுகிறது. சில பிரேசிலிய தயாரிப்புகளுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் 50 சதவீத வரி ஆகஸ்ட் 6 முதல் அமுலுக்கு வரும்.

ட்ரம்பின் இந்த வரி விதிப்பானது, பொருட்கள் வர்த்தகர்கள் மற்றும் பிரேசிலிய காபி ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க காபி பதப்படுத்துபவர்களுக்கு விற்கப்படும் சுமார் 8 மில்லியன் பைகளுக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சீனா பிரேசிலின் சிறந்த வர்த்தக பங்காளியாக உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா பிரேசிலிய மாட்டிறைச்சி மற்றும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பிற பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வந்துள்ளது.

ஜூன் மாதத்தில், அமெரிக்காவிற்குள் பிரேசிலிய காபி ஏற்றுமதி என்பது 60 கிலோ பைகளில் மொத்தம் 440,034 எண்ணிக்கையாக இருந்தது, இது அந்த மாதத்தில் சீனாவிற்கு பிரேசிலின் விற்பனையான கிட்டத்தட்ட 56,000 பைகளை விட 7.87 மடங்கு அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க காபி தேவையில் மூன்றில் ஒரு பங்கை பிரேசில் வழங்குகிறது, ஜூன் மாதத்தில் முடிவடைந்த 12 மாதங்களில் 4.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.