
கனடா நிதியமைச்சர் திடீர் ராஜினாமா!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக கனேடிய நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்டு (Chrystia Freeland) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். (திங்கட்கிழமை) வருடாந்திர அரசாங்க நிதி அறிவிப்பை வழங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃப்ரீலேண்டு தனது ராஜினாமா கடிதத்தை ட்ரூடோவுக்கு அனுப்பினார். அவரது கடிதத்தில், "கனடாவின் வளர்ச்சிக்கான சிறந்த பாதை குறித்து ட்ரூடோவுடன் உடன்பாடு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். |
ட்ரூடோ தம்மை அரசின் மிக முக்கிய பொருளாதார ஆலோசகராக மேலும் விரும்பவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார். சமீப நாட்களில், கனேடியர்களுக்கு 250 கனேடிய டொலர் வழங்கும் திட்டம் குறித்து ஃப்ரீலேண்டு மற்றும் ட்ரூடோ இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் கனடாவால் ஏற்க முடியாத செலவை ஏற்படுத்தும் அரசியல் யுக்தியாக இருப்பதாக ஃப்ரீலேண்டு விமர்சித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கெண்டிய பொருட்களுக்கு 25% வரி விதிப்பது குறித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். "இந்தப் பிரச்சனை கனடாவுக்கு பெரும் சவாலாக இருக்கும்" என்று ஃப்ரீலேண்டு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2020-ல் நிதியமைச்சராக பதவி ஏற்ற ஃப்ரீலேண்டு, கோவிட்-19 பேரிடரின் போது கனடாவை வழிநடத்த முக்கியப் பங்கு வகித்தார். ராஜினாமாவுக்கு பிறகும், ஃப்ரீலேண்டு லிபரல் எம்.பியாகத் தொடரவும், எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார். |