வெடுக்குநாறி மலை விவகாரம் .

11.04.2026 18:07:00

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் அவநம்பிக்கையையும் உருவாக்குவதாக இருக்கிறது என சுட்டிக்காட்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிக கவனம் செலுத்தி, தீர்வு பெற்றுத்தருவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரப்புக்கள் பௌத்த சமயத்துக்குரியது என்றும் அந்நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்துள்ள நிலையில், தமிழ் மக்களிடையே அது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வெடுக்குநாறி மலையில் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய சான்றுகள் அதிகமாக இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அந்நிலங்களை பௌத்த சமயத்துக்கானதாக அடையாளமிட்டு வர்த்தமானி அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த அமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது இனங்களுக்கிடையில் உண்மையை மறைப்பதாகவும் குறிப்பாக வரலாற்றை மறைப்பதாகவும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமையும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

முன்பு நாம் ஆட்சியில் இருந்தபோது வர்த்தமானி வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் கையாண்டு ஒரு சுமூக நிலைக்கு கொண்டு வந்திருந்தோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய நிலைமை, அதை முற்றாக மாற்றியமைப்பதாக இருக்கின்றது.

அந்த வகையில் இவ்விடயத்தின் உண்மை நிலையை விளக்கி எவ்வாறான நடவடிக்கை எடுப்பதனூடாக இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற கருத்தை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.