இதுவரை 1100 ரயில் பயணங்கள் ரத்து

06.05.2022 09:08:38

நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க ஏதுவாக இதுவரை பல்வேறு பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால், பல மாநிலங்களில் பல மணி நேரம் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, குறிப்பிட்ட சில பயணிகள் ரயில்களின் ஒருசில பயணங்களை ரத்து செய்து அதற்குப் பதிலாக அந்த வழித்தடத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 

அதன்படி கடந்த வாரம் முதல் இந்த நடைமுறையை ரயில்வே அமல்படுத்தியது. தொடக்கத்தில் குறிப்பிட்ட பயணிகள் ரயில்களின் 620 பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வரை நாடு முழுவதும் பல்வேறு ரயில் தடங்களிலும் செல்லும் பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 500 மெயில் மற்றும் விரைவு ரயில்களின் பயணங்களும், 580 பயணிகள் ரயில் பயணங்களும் அடங்கும்.