நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எவருக்கும் நிவாரணமளிக்க முடியாது!
|
நாட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானதாகும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஏதும் செய்ய முடியாது. ஆகவே நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எவருக்கும் நிவாரணமளிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் பொதுவானது.இனவாத சக்திகள் தற்போது ஒன்றிணைந்து தேசியம் அச்சுறுத்தலில் என்று போராட்டத்தில் ஈடுபடுகின்றன.சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை. சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு நாட்டு மக்களே பதிலளிப்பார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். |
|
பதுளை நகரில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தேசியம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஒருசில ஊடகங்கள் தான் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் மக்கள் மத்தியில் அவ்வாறான பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைந்து வரும் அதேவேளை பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு நிவாரணமளித்துள்ளோம். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒருசில வரிகள் இரத்துச் செய்யப்படும். கல்வி மாத்திரமே பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம். தமது பிள்ளைக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஒரே எதிர்பார்ப்பாகும்.புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்தும் பழைய பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதற்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.எதிர்வரும் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும். இளம் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமாயின் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சட்டத்தில் தமக்கு விசேட சலுகையளிக்கப்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று சட்டத்துக்கு அஞ்சுகிறார்கள். தாம் செய்த குற்றம் மற்றும் மோசடிக்கு சட்டம் எப்போது தன்னை தேடிவருமோ என்று அச்சத்தில் வாழ்கிறார்கள். நாட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானதாகும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஏதும் செய்ய முடியாது.ஆகவே நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எவருக்கும் நிவாரணமளிக்க முடியாது.சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் பொதுவானது. நாட்டின் பொருளாதாரம்,சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக கட்டமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பேச முடியாது. ஏனெனில் இவர்கள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியானார்கள். அரச நிதியை கொள்ளையடித்தார்கள், பாதாள குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்கினார்கள். ஏதும் பேசுவதற்கு இல்லை என்பதால் தற்போது இனமும், தேசியமும் அச்சுறுத்தலில் என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இரண்டு ஊடகங்கள் இதற்கு மாத்திரம் முன்னுரிமையளித்துள்ளன. அந்த ஊடகங்களும் அவ்வாறான கொள்கையில் தானே செயற்படுகின்றன. இனத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருதரப்பு முயற்சிக்கிறது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என்றார். |