இந்தியர்கள் மீதான வெறுப்பு பேரணி!

01.09.2025 08:01:48

இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்கள். அதேநேரம் இந்தியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமும் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

 

அப்படித் தான் இந்தியர்கள் மீது முழுக்க முழுக்க வெறுப்பை விதைக்கும் ஒரு பேரணி அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சில நாடுகளில் இந்தியர்கள் இன ரீதியான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதனால் இனவெறி தாக்குதல்களும் நடக்கிறது. சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே அவுஸ்திரேலியாவில் அப்படித் தான் குடியேற்றத்தைக் கண்டித்து மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.

குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை முழக்கமாக வைத்து நடந்த இந்தப் பேரணியில் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவே பல்வேறு வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.

“March for Australia” என்ற பெயரில் பேரணி நடந்தது.

இதில் அவுஸ்திரேலிய மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் மீது வன்மத்தைக் கக்கும் வகையிலான வாசங்கள் இடம்பெற்று இருந்தது.

 

இது குறித்து வழங்கப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தில், “100 ஆண்டுகளில் கிரேக்கர்களும் இத்தாலியர்களும் வந்ததை விடக் கடந்த 5 ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் வந்துவிட்டனர். ஒரு நாட்டில் இருந்து மட்டுமே இத்தனை பேர் வந்துள்ளனர் என்றால் மற்ற நாடுகளை நினைத்துப் பாருங்கள்.. குடியேற்றம் என்பது கலாச்சார ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது சிறிய கலாச்சார மாற்றம் அல்ல. இது அப்பட்டமான மாற்றம். பன்னாட்டு நிதியால் சுரண்டப்படும் பொருளாதார மண்டலமாக அவுஸ்திரேலியாவை மாற விட மாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரணிகளில் இந்தியர்கள் மீது வன்மத்தைக் கக்கும் வகையிலான போஸ்ட்களை பரவலாகப் பார்க்க முடிந்தது.

அந்நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி , 2013 முதல் 2023 வரை இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி, சுமார் 8.45 லட்சமாக உயர்ந்துள்ளதாம்.

குடியேற்றத்தைத் தடுக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், கான்பெர்ரா போன்ற பல முக்கிய நகரங்களில் மிகப் பெரிய பேரணிகள் நடைபெற்றதுடன் சிட்னியில் நடந்த பேரணியில் 5,000 முதல் 8,000 பேர்வரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.