எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பொலிகண்டியில் இறங்குதுறை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இழுவைமடி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை,பொலிகண்டியில் மீன்பிடி கப்பல்களை நங்கூரமிடுவதங்கான இறங்குதுறை ஒன்று இல்லை.
இந்த பகுதியில் அதிகளவான மீனவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டுவருகின்ற நிலையில் நீண்டகாலமாக குறித்த பகுதியில் படகுகளை நங்கூரமிடுவதற்கான இடமொன்று இல்லை. இந்த விடயம் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் ஆழ்கடல் மீன் பிடிக் கப்பல்களை நங்கூரமிடுவதற்கான இறங்குதுறைகளை அமைத்துகொடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
யாழ்., மாவட்டத்தின் சில இடங்களில் இழுவை மடி கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் கரிசனை கொள்ளாது செயற்படுகின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்வது எமது நோக்கமல்ல. இழுவை மடி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வசதிகனை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.