நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ரி-20இல் நியூஸிலாந்து வெற்றி!

05.08.2022 10:29:25

நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஹேஃக் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கப்டில் 45 ஓட்டங்களையும் நீஷம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வென் பீக் மற்றும் ஷரீஸ் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளைடொன் பிளைட், டிம் பிரிங்கல் மற்றம் ரெயான் க்ளெய்ன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீட் 66 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வட்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிக்னர் 4 விக்கெட்டுகளையும் பென் ஸியர்ஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.