இன்று வருகிறது ஐஎம்எவ் குழு!

26.03.2026 08:42:06

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை (26) நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

    

 

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு, இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக 2025 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் 2025 நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் நாடு மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்ததை அடுத்து, துரித நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

அதனையடுத்து இதுபற்றி அறிவிப்பொன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பணிப்பாளர் எவான் பபஜோர்ஜியோ, துரித நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5ஆம் கட்ட மீளாய்வைப் பூர்த்திசெய்வது பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகைதரும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் நீட்சியாக அண்மையில் இதுகுறித்துக் கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்த 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையிடம் அனுமதிகோர உத்தேசித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாளை நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இக்காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், திறைசேரியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், தனியார் துறையினர், முயற்சியாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் பரந்துபட்ட சந்திப்புக்களை நடாத்தவுள்ள நாணய நிதிய அதிகாரிகள், 'தித்வா' சூறாவளியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கள விஜயங்களை மேற்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.