'திமுகவிற்கு நான் விடுக்கும் எச்சரிக்கை' -
சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஜய் பேசுகையில், ''அண்ணல் அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது அதுவும் முக்கியமான நாளில் கலந்து கொள்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கிறேன். இன்னைக்கும் நிறைய பேர்கிட்ட உங்களுடைய ஹாலிடே டெஸ்டினேஷன் என்ன என்று கேட்டால் நியூயார்க் சிட்டி என்று சொல்வார்கள். இரண்டு, மூன்று நாட்கள் அங்கு சென்று விட்டு, தங்கி விட்டு வருவது பெரிய ஸ்டேட்டஸ் எனவும், அச்சீவ்மென்ட் எனவும் நினைப்பார்கள். ஆனால் நூறு வருஷத்திற்கு முன்னாடியே நியூயார்க்கெல்லாம் போய் உலகப் புகழ்பெற்ற கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்து டாக்டர் பட்டம் வாங்கி சாதித்த ஒரு அசாத்தியமானவர் ஒருவர் இருந்தார். அது கூட பெரிதல்ல அவர் எந்த சூழ்நிலையில் அங்கு போய் படித்து சாதிச்சாரு என்பதுதான் மிகப்பெரிய விஷயம். |
நீ இந்த சாதியில் பிறந்திருக்கிற உனக்கு படிப்பதற்கெல்லாம் தகுதி இல்ல. நீ எதுக்கு ஸ்கூலுக்கு வர என அவர் வாழ்கின்ற சமூகமே அவரை தடுத்தது. அதையும் மீறி அந்த மாணவர் பள்ளிக்கூடம் போனால் சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார்ந்து படிக்க அவருக்கு அனுமதி இல்லை. தாகம் எடுத்தால் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அப்படி அனைத்து சதிகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் தான் ' நீ படி' எத்தனை தடைகள் வந்தாலும் படி, தொடர்ந்து படி என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதுதான் அந்த மாணவனின் உள்ளே இருந்த அந்த வைராக்கியம். அந்தச் சின்ன வயசுல அந்த மாணவருக்கு எப்படி இப்படி ஒரு வைராக்கியம் வந்தது என்று நினைத்து பார்க்கும் பொழுது உண்மையாகவே பிரமிப்பாக தான் இருந்தது. அந்த மாணவன் தான் பிற்காலத்தில் நாட்டினுடைய தலைசிறந்த அறிவு பெற்றவராக மாறுவதற்கும் காரணமாக இருந்தது. ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்ததேதியை இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் அதை இந்திய ஒன்றிய அரசிடம் வைக்கிறேன். மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கிற பிரச்சனைககள் ஒன்னா ரெண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக இதையெல்லாம் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், மற்றவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு என்ன தெரியுமா? ரொம்ப சிம்பிள் தான். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு அமைந்து விட்டாலே போதும். இங்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவிட் போடுவது. சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வது, சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று கொண்டு போட்டோ எடுப்பதும். எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியது ஆகிவிட்டது. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார். |