இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறம்பட கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஒழுங்குமுறைகளின்படி, இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் தனித்துவமான சிறப்புப் பரிவர்த்தனை எண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், அந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் கட்டாயமாக இலங்கைச் சுங்கத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் விவரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, பயன்படுத்தப்படும் நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவு செய்யப்பட்ட திகதி, தற்காலிக விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக, இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகள் ஊடாக முற்கொடுப்பனவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் இந்த உத்தரவுகள் மூலம், இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை முறையாகக் கண்காணிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.