ஜனாதிபதி அனுரவின் பிரான்ஸ் பயணம் திடீரென ஒத்திவைப்பு!
|
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட சிறப்பு இராஜதந்திர குழுவின் பிரான்ஸ் விஜயம் இறுதி நேரத்தில் திடீரென காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
|
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவும் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இந்த திடீர் ஒத்திவைப்பிற்கான காரணங்கள் எதனையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் திட்டமிட்டபடி எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. எதிர்வரும் 16 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த இந்த பிரான்ஸ் விஜயமானது, பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்ட பின்னணியிலேயே இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் பிரான்சின் முன்னணி எண்ணெய் நிதியமானது புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளமை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் சமன்பாடுகளையும் எரிசக்தி அரசியலையும் முற்றாக மாற்றியமைக்கக் கூடிய ஒரு புதிய திருப்பமாக உருவெடுத்துள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மையப்புள்ளியான இலங்கையை நோக்கி, ஐரோப்பாவின் வல்லரசான பிரான்ஸ் தற்போது மேற்கொண்டுள்ள இந்த எரிசக்தி நகர்வு பிராந்திய புவிசார் அரசியலில் ஏற்கனவே பெரும் சலனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரான்சின் இந்த மாபெரும் எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம் மற்றும் இலங்கையின் புதிய எரிசக்திக் கொள்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருந்தமையால், இது சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் கவனத்தையும் இலங்கையை நோக்கி ஈர்த்திருந்தது. எண்ணெய் திட்டத்திற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களில் பிரான்சின் முன்னணி கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. - சி.ஜி.எம். முதலீடு செய்யக் காட்டும் தீவிர ஆர்வமும் இந்த பிராந்திய தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியிருந்தது. உலக வங்கியின் அண்மைய துறைமுக மதிப்பீட்டு அறிக்கைக்கு மத்தியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரான்சில் சி.எம்.ஏ. - சி.ஜி.எம். நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ரோடால்ஃப் சாடே மஹானாவை நேரில் சந்தித்து இந்த முதலீட்டுத் திட்டங்களை இறுதி செய்யவிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'திருகோணமலையைக் கட்டுப்படுத்துபவனே ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான்' என்ற நெப்போலியனின் வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் தற்போதைய நகர்வுகள் அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலங்கையின் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைப்பதோடு, பிரான்சின் இந்தத் தீவிர எரிசக்தி மற்றும் துறைமுகப் பிரவேசம், பிராந்தியத்தில் ஏற்கனவே செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடி வரும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையே புதிய உத்திகளை உருவாக்கத் தூண்டியுள்ளது. இவ்வாறானதொரு உயர் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் தற்போது புதிய திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை, இந்த பிரம்மாண்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்த புதிய விவாதங்களை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |