இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்

20.05.2024 09:38:10

தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, காலநிலை விவகாரங்கள் தொடர்பான தனது ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் நேற்று இந்தோனேசியாவின் பாலியில் எலோனைச் சந்தித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

எவ்வாறாயினும், எலோனின் இலங்கை விஜயத்தின் சரியான திகதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படாததுடன் இலங்கை அரசாங்கம் எலோனின் குழுவுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை தீர்மானிக்கவுள்ளது.

“இலங்கை எவ்வாறு ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துகிறது என்பதைப் பொறுத்தே, அது முடிந்தவுடன், Starlink ஐ அறிமுகப்படுத்த எலோன் இலங்கைக்கு வருவார். இந்த ஆண்டின் இறுதியில் அவர் இலங்கைக்கு வருவார் என்று தற்காலிகமாக விவாதிக்கப்பட்டது" என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பில்லியனர் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலிக்கு வந்தார்.

ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு எலோன் விண்ணப்பம் அனுப்பியிருந்ததுடன், மேலும் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.

இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.