மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தப்பிக்க முடியாது.
|
மூதூர் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு என்பது வெறுமனே நினைவுகூரலால் மாத்திரம் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது. மாறாக இது சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை என்பதையும், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிக மோசமான மனித உரிமைமீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் இலங்கை அரசாங்கம் நிரூபிக்கும் சம்பவமாக அமையவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. |
|
இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மூதூர் படுகொலைகள் தொடர்பில் அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்கள் தொடர் விசாரணைகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த நீண்டகாலத் தோல்வி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உண்மை மற்றும் நீதிக்கான உரிமையை மறுதலித்திருப்பதுடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் அதிகாரிகள் கொண்டிருக்கும் கடப்பாடு மீதான நம்பிக்கையை சீர்குலைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பது என்பது மிக நீண்டகாலக் காத்திருப்பாகும். அவர்கள் இரு தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களை இழந்ததன் வலியைச் சுமந்துவருகின்றனர். அவ்வாறிருந்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யத் தவறிவிட்டது. மூதூர் படுகொலைகளின் 20 ஆவது ஆண்டு நிறைவு என்பது வெறுமனே நினைவுகூரலால் மாத்திரம் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது. மாறாக இது சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை என்பதையும், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் நிரூபிக்கும் சம்பவமாக அமையவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் இந்தப் படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நியமங்கள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமானதும், நடுநிலையானதுமான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |