பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!
பங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது.
பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மொஹமட் யூனுஸ் அரசாங்கத்தின் கீழ் இது முதல் போராட்டமாகும்.
கடந்த ஆண்டு ஜூலை எழுச்சியின் முக்கிய நபரும், கடந்த வாரம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான இன்கிலாப் மஞ்சின் செய்தித் தொடர்பாளருமான ஷெரிப் ஒஸ்மான் ஹாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன.
அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களின் தலையில் சுடப்பட்டதில் படுகாயமடைந்த ஹாடி, சிங்கப்பூரில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (18) இரவு காலமானார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (DMCH) அவருக்கு முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரது மரணச் செய்தி வெளியான உடனேயே, அவரது ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டாக்காவின் ஷாபாக்கில் கூடி, நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டங்கள் உட்பட, பங்களாதேஷில் உள்ள பல மாணவர் அமைப்புகளும் தலைநகர் முழுவதும் வீதிகளில் இறங்கின.
போராட்டத்தின் போது ஆர்வலர்கள், உள்துறை ஆலோசகரும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரியின் உருவ பொம்மையை எரித்தனர்.
ஹாடி மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்யத் தவறியதற்காக அவர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
இதனால், டாக்காவின் சில பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை நேற்றிரவு வெகுநேரம் வரை மிகவும் நிலையற்றதாகவே இருந்தது.