ரணிலின் பாதையில் அநுர அரசு

28.11.2024 07:00:00

 

அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

    

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரேமதாச, பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது என்றார்.

தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய பிரேமதாச, மின்சார விலை மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணிபுரிவதை தனது கட்சி ஆதரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

வெளிப்படைத் தன்மையின்மை காணப்படுவதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் இயலாமையை விமர்சித்தார்.