அறத்திற்கு எதிரான செயல்

09.09.2022 10:47:42

 

இலங்கையில் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம், மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை ஆகியன அறத்திற்கு எதிரான செயல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவு பணவீக்கம் 94 சதவீதமாக காணப்படுவதோடு உண்ண உணவின்றி மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில், இவ்வாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது நியாயமா என ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

பொருளாதார நெருக்கடிக்கான காரணம்

“இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற லஞ்ச, ஊழல் மற்றும் திருட்டுச் சம்பவங்களே காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்களால் திருடப்பட்ட தொகை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி

சிறிலங்கா அரசாங்கத்தினால் சேர்க்கப்படும் வரிப்பணங்கள் மக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுமென குறித்த சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் குறித்த வரி சமூக பாதுகாப்புக்காக மாத்திரமே உபயோகிக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.