தேசிய நலன் கருதியே கைகோர்த்தோம்!
”தேசிய நலன் கருதியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கடந்த காலங்களில் நாங்கள் பெரிதளவில் தொடர்புபட்டவர்கள் அல்ல. ஆனால் தேசிய நலன் கருதி இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்.
இரு வேறு திசைகளில் பயணித்த நாம் இன்று ஒரு திசையில் பயணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்.
மக்கள் ஆணையூடாக தெரிவு செய்யப்படும் ஒருவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். அதனையே நாமும் எதிர்ப்பார்க்கின்றோம். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமையும்” இவ்வாறு ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.