அரசு அதிகாரிகள்- ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்- செல்பி எடுத்து அனுப்பவும் உத்தரவு

10.08.2023 09:40:09

அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின பவள விழாவையொட்டி தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அதே போல இந்த ஆண்டு சுதந்திரதினவிழா 75- வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான கொண்டாட்டம் வருகிற 13-ந்தேதி தொடங்கி 15- ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை கொண்டாட இப்போது இருந்தே பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் 4.50 லட்சம் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரதினத்தையொட்டி தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சாரதுறை சார்பில் அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75- வது ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களிடம் தேச பக்தி மற்றும் தேசிய கொடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 நாட்கள் நடைபெறும் கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசிய கொடியுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கலாச்சார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.