மத்திய அரசு தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய திட்டம் !
இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது.
இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிறது.
டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தின் 54 சதவீத பங்குகளை ஜிஎம்ஆர் குழுமம் வைத்திருக்கும் நிலையில் ஏஏஐ 26 சதவீத பங்குகளையும், பிராபோர்ட் ஏஜி,இராமன் மலேசியா ஆகியவை தலா 10 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
ஹைதராபாத் விமான நிலையத்தின் 26 சதவீத பங்குகளை ஆந்திர அரசுடனும், பெங்களூரு விமான நிலையத்தின் 26 சதவீத பங்குகளை கர்நாடக அரசுடன் ஏஏஐ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.