ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்குச் சிறப்புள்ள கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு இன்றைய தினம் (28) இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்குத் தங்களுக்குக் கொள்கை ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தனிப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கும் எனச் சங்கம் எச்சரித்துள்ளது. நீதித்துறையின் சுயாதீனத்தையும், மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாக்க இத்தகைய சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.
குறுகிய நோக்கத்துடனான இத்தகைய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சியையும் மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகளையும் பலவீனப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள சங்கம், இத்திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.