
செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. |
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை; என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு தலைமைக் காவலர்கள் உட்பட நான்கு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |